படைப்பென்பது வினோத மானது. ஆழமானது. பிரதிபலன் பாராதது. உதாரணத்திற்கு விருட்சங்கள். அவை படைக்கப்பட்டு விருட்சமாய் நெடிதுயர்ந்து வளர்ந்து நிழல்தந்து, காய் தந்து, கனி தந்து, அதன் சின்னஞ் சிறு மெல்லிய கிளைகள்கூடயாக சமித்தாகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்கின்றன. படைக்கப்பட்ட அத்தனை யும் பயன்படவே உருவாக்கப் பட்டவை. சாதாரண புற்கள்கூட ஆநிரைகளான பசுக்கள் தின்று பால் சொரிய உதவுகின்றன. தீயவனின் கைகளுக்குச் சென்றவுடன் பழம் தன் தித்திப்பை கசப்பாக் கிக் கொள்வதில்லை. பசுவும் நல்லோர், தீயோர் பார்த்து பால் தருவதில்லை. பாரபட்ச மில்லாததே படைப்பின் சூட்சுமம்.
படைக்கப்பட்டவற்றுக்கே இத்தனை விஷேசத்தைத் தந்திருக்கும்போது படைத்த வனான இறைவன் பாகுபாடு பார்ப்பானா? எட்டு லட்சத் திற்கும் அதிகமான யோனி பேதம் கடந்து பிறப்பெடுத்து இந்த உயரிய மானிட ரூபம் தந்ததே இறைவனின் உயரிய கருணை. இதில் பொறாமை கள், ஏற்றத்தாழ்வுகள், பிறர் செல்வம் கவர்தல், களவு, கயமை என்பது கடந்து இன்னா செய்யாமை, புறங்கூறாமை என்று நன்னூல் கூறுவதுபடி நடத்தல் என்பது இப்போதில்லை.
அல்லது குறைந்து விட்டது. எவ்வளவு ஞானிகள் வந்தாலும், எத்தனை அவதாரங்கள் நிகழ்ந்தாலும் ஆத்ம விசாரணை குறைந்து விட்டபடியால் மக்கள் மாற வில்லை. அப்படியும் மக்களுடன் பழகி, அவர்களின் அறியாமையை நீக்கி, அவர்களை நல்வழிப்படுத்துதலை மேற்கொள்ளும் துறவியின் செயல்களைப் பரிகசிக்கும் கூட்டங்கள் இருக்கத் தான் செய்கின்றன. அப்படித்தான் ஸ்ரீராகவேந்திரரை அவமானப்படுத்த அந்த நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
""பார்த்து... துளியும் சந்தேகம் வரக்கூடாது. நீ சிறிது கனமாய் மூச்சுவிட்டாலும் உன் முகத்தைப் போர்த்தியிருக்கும் துணியே காட்டிக்கொடுத்துவிடும். எனவே முகம் திறந்திருக்கட்டும். மார்பின் ஏற்ற இறக் கங்களை மறைக்க வேண்டும். எனவே கைகளைக் கோர்த்து மார்பின்குறுக்காக இருக்கும்படி வைத்திருப்போம். நாம் அவனைச் சுற்றி நின்று மறைவையையும் உருவாக்குவோம்.''
""வேண்டாம்; சந்தேகம் வரலாம். நாம் அந்த துறவியைச் சுற்றியே நிற்போம். சரிசரி... முகத்தை எல்லாரும் சோகமாக வைத்திருப்போம். ஏய்... நீ இவனுக்கு சித்தப்பனல்லவா... நீ அழுகையில் இரு. சரி...சரி... கூட்டம் வெகு அருகில் வந்து விட்டது.''
பெரிய சலசலப்பு உண்டானது. அங்கே ஓவென்ற ஓலம் எழுந்தது. சித்தப்பனானவன் குரல்கூட்டி அழுதுகொண்டிருந்தான்.
ஸ்வாமி ராகவேந்திரரின் சீடனொரு வன் சட்டென்று முன்சென்று சங்கதி கேட்டான்.
""காலைவரை ஓடியாடி வேலைசெய்து சிரித்து வலம்வந்துகொண்டிருந்தவன் திடீரென்று மயங்கி விழுந்தான். வந்து சோதித்த மருத்துவர் இறந்துவிட்ட தாகத் தெரிவிக்கிறார். இவன் என் அண்ணன் மகன். அவர் வந்து கேட்டால் நான் என்ன சொல்வது? இந்த வழியே உங்கள் சாமி ராகவேந்திரர் வருகிறார் என கேள்விப்பட்டோம். அவர் இறந்த வர்களுக்கு உயிர்கொடுத்து எழுப்புகிறார் என கேள்வியுற்று வழியில் இவனைக் கிடத்தியுள்ளோம்'' என்றான் போலியாக அழுதுகொண்டே.
""அடடா... ஆண்டவனே... சரி நீங்கள் நேரில் ஸ்வாமிகளிடம் சொல்லுங்கள்'' என்றான் சீடன் பரிதாபம் மேலோங்க...
ஸ்வாமிகளிடம் அவன் அப்பட்டமாக நடித்தான். சீடனிடம் கூறியதை அப்படியே மறுபடி கூறி ஓவென்று அழுது ஒப்பாரி வைத்தான். முகத்தில் எந்த சலனமுமின்றிக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீராகவேந்திரரிடம் பொலிவான புன்னகை எழுந்தது. தண்டம் தோளில் சாய்ந்தபடி இருக்க, இரு கைகளையும் உயரே தூக்கித் தொழுதபின் கண்மூடி கைகூப்பி மௌனமானார். மூடியபடியே இருந்த விழிகள் வெகுசில நிமிடத்தில் திறக்க, மெல்ல முன்னோக்கிச் சென்றார். மெல்ல அருகில் சென்றவர் மெல்லிய குரலில் கூறினார்.
""அவன் விதி முடிந்துவிட்டது; அவ்வளவு தான். இல்லத்திற்கு எடுத்துச்சென்று ஈமக் கிரியை செய்ய ஆரம்பியுங்கள்.''
""ஐயோ ஸ்வாமி. நீங்கள் இப்படிக் கூறலாமா? எப்படியாவது அவனுக்கு உயிர்கொடுங்கள்'' என்று நா தழுதழுக்க நடித்தான்.
""இல்லை. இறைவன் விதித்த விதி. அதை யாராலும் மாற்றமுடியாது.''
""மாற்ற முடியாதா?''
""ஆமாம்; மாற்றவே முடியாது.''
""பிறகு அந்த மாம்பழரசக் குழந்தை கண் விழித்ததும், நவாப் மகன் உயிர் பெற்றதும்...?''
""அவர்கள் விதி முடியவில்லை. தள்ளிப்போடப்பட்டிருந்தது. அன்று என்னால் எழுப்பப்பட வேண்டுமென்பதும் விதிதான்.''
""அப்போது முடிந்தது, இப்போது முடியாதென்பது நம்பும்படி இருக்கிறதா? காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததோ'' என்றான் எகத்தாளமாய். இப்போது அவனிடம் சத்தமான சிரிப்பு எழுந்தது. சீடர்கள் அவனது மரியாதையின்மைக்கு கோபப்பட்டனர்.
""அடேய்... எழுந்திரு. இந்த கபட ஞானியின் முகத்திரை கிழிந்துவிட்டது. ம்...
எழுந்திடடா... அமலா எழுந்திடடா... டேய் நடித்தது போதும் எழுந்திரு...'' என்று, இறந்தவன்போல் நடித்த தன் அண்ணன் மகனை எழுப்பினான் அவன். ஆனால் சிறுவனிடம் எந்த சலனமும் இல்லை. அருகில் சென்று அவனை அசைத்துப் பார்க்க, தலை சரிந்தது. நாடிப்பிடித்து, நாசியருகே விரல் வைத்துப்பார்த்து ஒரு முதியவர் அந்த சிறுவனின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.
""மகாசக்தி வாய்ந்த ஞானியை அவமானப்படுத்தினாயல்லவா. அதற்கான தண்டனைதான் இது.'' கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது. இவன் கூட்டத்திலிருந்து சாட்சியாகப் பார்த்தவன், இப்போது இவனுக்கு எதிராய்ப் பேசினான். ஆங்காங்கே சலசலப்பு எழுந்தது. கூச்சலும் அழுகையும் ஒன்றுசேர, களேபரமானது.
ஸ்ரீராகவேந்திரர் கூட்டத்தினை அமைதிப் படுத்தினார். அதற்குள் அந்த சிறுவனது சித்தப்பா ஸ்வாமிகளின் எதிரில் மண்டியிட்டு அழுதான். ""தெரியாமல் செய்துவிட்டேன். அதற்காக தண்டித்துவிடாதீர்கள்'' என பெருங்குரலெடுத்து அழுதான்.
""பாரப்பா. யாரும் யாரையும் தண்டிக்க அதிகாரமில்லை. இறைவனே எதற்கும் அதிகாரி. அவனே அனைத்தையும் தீர்மானிப்பவன். அந்த சிறுவனுக்கு இன்றுதான் மரணமென்பது மாற்ற இயலாத விதி. நீ என்னை பரிசோதிக்க நினைத்த தும் விதி. சிறுவனை உயிர்ப்பிக்கலாகாது என்பதும் விதி. இது காலக்கணக்கு. தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்தின் பொருட்டு தர்மம் மற்றும் புண்ணியங்கள் இவற்றையும் ஆராய்ந்தே ஒருசில பொழுது எனது இறைஞ்சலுக்கு இதில் மாற்றியமைக்க இறைவன் அறிவுறுத்துவான். நான் அதன்படி நடப் பேன். எனவே நீ அமைதியடை. எனக்கான சக்தியை நான் பிரயோகப்படுத்தவும் கட்டுப் பாடுண்டு. விதிவிலக்கும் உண்டு. எனவே அமைதியடை. இன்றிலிருந்து பதினாறாம் நாள் அச்சிறுவனின் பெயரால் வறியவருக்கு அன்னமிடுங்கள். எறும்புகளுக்கு அரிசி உணவிடுங்கள். அவன் உடனே உங்கள் குடும்பத்தில் புண்ணியப் பிறப்பெடுப்பான்'' என்று கூறி அவனை நல்வழிப்படுத்தினார்.
""ஸ்வாமிகள் என்னை மன்னித்தருளுங்கள்'' என்றவன் பூமியில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.
ஸ்வாமிகள் அவனை ஆசிர்வதித்து நகர்ந்தார். கூடியிருந்த கூட்டம் வணங்கி வழிவிட்டது. ஸ்வாமிகள் தனது பயணத்தைத் தொடரலானார்.
மனிதர்கள் எல்லாரும் நல்லவரே. பிறப்பும், பின் வளரும் சூழ்நிலையும், வாழ்க்கை அமையும் விதத்தையும் பொருத்தே அவர்களின் சுயம் இழத்தலும் துரதிருஷ்டமாக நடைபெற்றுவிடுகிறது. அறிமுகமே இல்லாமலும், பிறரினைப்பற்றித் தெரியாமலும் நல்ல உள்ளங்கொண்டவரை புறங்கூறும் இயல்பைக் கொண்டுள்ள ஒரு சாரார் திருந்தவும் ஞானிகள்தான் பொறுமை காத்து திருந்தவும் வழிசெய்கின்றனர்.
ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரர் தனது நெடிய சஞ்சாரப் பயணத்தில் அனேக சந்தர்ப்பங் களில் அநேக அற்புதங்கள் புரிந்திருக்கிறார்.
பலரது இன்னல்களைக் களைந்திருக்கிறார்.
பலர் உயிர்ப்பிக்கப்பட்டும், பல சபைகளில் தர்க்கத்தில் வெற்றிபெற்றும் தனது அவதாரக் கடமையைப் பூர்த்திசெய்து கொண்டிருந் தார். அவர் ஆதோனியிலிருந்து புறப்பட்டு, கிருஷ்ணா நதிக்கரையிலிருந்த ஸ்ரீசைலம் வந்தடைந்தார். கிருஷ்ணா நதி மகாராஷ்டிரா வில் தொடங்கி கர்நாடகா வழியாகப் பாய்ந்து ஆந்திரத்தில் பயணித்து (சுமார் 1,300 கிலோமீட்டர்) வங்கக்கடலில் கலக்கிறது. இங்குள்ள ஈஸ்வரரின் திருவுருவான லிங்கத்தினை நாமே தொட்டு வணங்கலாம். ஸ்ரீராகவேந்திரர் அந்த புண்ணிய நதியினில் நீராடி இறைவனை தரிசித்து, தனது பயணத்தைத் தொடர்ந்து திருப்பதி வந்தடைந்தார்.
தன் பிறப்பிற்கு அருள்செய்த ஸ்ரீவேங்கடேசப் பெருமாளைக் காண மலையேறிச் சென்றார். காளிகோபுரம் அருகே சற்று இளைப்பாறினார். நெருக்கமான மரங்கள் சூழ்ந்த வனத்தின் ஊடே இயற்கையான ஈரக்காற்றும், பறவை களின் ரீங்காரமும், நடுநடுவே ஆங்காங்கே எழும்பும் மிருகங்களின் உறுமலும் சூழலை பயமாய்க் காட்டினாலும், பெருமாள்மீது அபார பக்தி கொண்டவர்கள் அவரே கதியென்று "கோவிந்தா... கோவிந்தா' என உரக்க உற்சாகமாகக் கூறி அன்னாந்து பார்த்து வணங்கிக்கொண்டே நடந்தவாறிருந்தனர்.
ஸ்ரீராகவேந்திரர் தனது சீடர்களுடன் மலைப் பாதைக் கடந்து கோவிலை அடைய, பூர்ண கும்ப மரியாதையுடன் ஸ்வாமிகளை திருக்கோவிலின் உள்ளே அழைத்துச் சென்றனர். ஸ்வாமிகள் வேங்கடமுடையானை பரவசத்துடன் தரிசிக்கலானார். தனதுகுலதெய்வமான பெருமாளிடம் ராயருக்கு ஆழ்ந்த ஈடுபாடுண்டு. அதுமட்டுமின்றி நரநாராயணர்கள் போன்று ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும் ஸ்ரீராயருக்கும் ஒரு பொருத்தமுண்டு. பக்தர்களின் பிரார்த் தனைக்கு இரங்கி அருள்செய்வதில் விரைவானவர்கள் திருப்பதி வேங்கடேசப் பெருமாள், மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்திரர் என்ற இருவரே என்பது இப்போது இருக்கின்ற நம்பிக்கை மொழி. அது-
"தேவரெந்த ரெ திருப்பதி திமேப்பனு
குருகனெந்த ரெ மந்த்ராலய ராகப்பனு'
என்று புகழ்பெற்ற பாடல் அறிவிக்கிறது என்றால், பிரத்யட்சமாக எத்தனைப்பேரின் வேண்டுதல்கள் நிறைவேறியிருக்கும் என்பது வியப்பான ஒன்று.
பிறகு திருமலையிலிருந்து நேரே காஞ்சிபுரம் வந்து, பல கோவில்களில் தரிசனம் செய்து வரதராஜப் பெருமாளை தரிசனம் செய்து, அங்கு வீற்றிருக்கும் ந்ருசிம்மரின் திருவுருவம் எதிரே மெய்ம் மறந்து கண்மூடித் துதித்தார். பரவசத்தில் அவருக்கு ஆனந்த பாஷ்யம் பெருகிற்று. முன்ஜென்மத் தொடர்பால் ஏற்பட்ட அதிர்வோ?
பின்னர் அங்கிருந்து கிளம்பி திருவண்ணாமலை சென்று அந்த அக்னி க்ஷேத்திர அதிபதியான அருணாசலேஸ்வரை தரிசித்தார். "ஆஹா! எத்தனை ரம்யமான க்ஷேத்திரம். இந்த மகாபுண்ணிய க்ஷேத் திரத்தில் எத்தனையெத்தனை மகான்கள் வரப்போகிறார்கள். எவ்வளவோ போதனைகள் இங்கிருப்பவர்களால் அருளப்பட்டு, வேதனையோடு வருபவர்களை பக்குவப் படுத்தி சாதனையாளர்களாக ஆக்கப் படுவார்கள். ஆஹா! இந்த பசுமையான மலையே எனது கண்களுக்கு மகேசனாக அல்லவா தெரிகிறது. இந்த அதிகாலையில் "அரோகரா' என்றும், "நமசிவாயம்' என்றும் மக்கள் உற்சாகத் துள்ளலோடு உரக்கக் கூறுவது பிறருக்கும் அல்லவா தொற்றிக்கொள்கிறது. இந்த ஊரே உற்சாகம் நிறைந்தே இருக்கிறது. அருணகிரியார் கிளியாய் மாறியது இந்த திருக்கோவிலில் தானே. அடடா... பட்டினத்தார் தனது திருவோட்டையும் துறந்து தனது வெறுங்கை யால் யாசகம் பெற்றுண்டது இந்த கோபுரத்தின் அருகேதானே. அவரின் சீடன் பத்ரகிரியார் தனது திருவோட்டையும், பற்று வைத்திருந்த நாயின் தலைமீது உடைத்து பூரண ஞானம் பெற்ற இடம்... ம்...
இதோ இதேதான். "காதற்ற ஊசியும் கடைவழிக்கு வாராது' என்னும் பெரிய தத்துவத்தை- எளிய விளக்கமாக உலகிற்கு அளித்த உத்தமமான மகான் சஞ்சரித்த இடமல்லவா...' என மனக்கண் முன்னே அத்தனை நிகழ்வினையும் தன்னுள் உணர்ந்தார் ஸ்ரீராயர்.
பின் விருத்தாசலம் அருகே ஸ்ரீமுஷ்ணத் தில் சுயம்புவான பூவராகப் பெருமாளை தரிசித்தார். பின் தான் பீடமேற்று நிர்வகித்த கும்பகோணம் திரும்பினார். கும்பகோணம் எல்லையிலேயே மக்கள் உற்சாகத்துடன் கூடியிருந்தனர். வெகு நாட்கள் பிரிந்திருந்த தாயைக் காணும் உற்சாகத்தில் மக்கள் கூடியிருந்தனர். "அதோ வந்துவிட்டார் நமது ராகவேந்திரர். அதோ... அதோ...' என உற்சாகக் குரலெழுப்ப, மங்கள வாத்தியம் முழங்கியது. பூர்ணகும்பத்துடன் ஸ்வாமிகளுக்கு வரவேற்பளித்ததை ஸ்ரீராகவேந்திரர் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். "ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ... ஓம் ஸ்ரீராகவேந்திராய... நமஹ' என்ற உரத்த கோஷம் கேட்டுக்கொண்டேயிருந்தது. ஒட்டுமொத்த ஜனசமுத்திரம் ஸ்ரீராக வேந்திரர் பின் திரண்டது. அந்த ஸ்ரீராமனே அயோத்தி திரும்பிவந்தபோது திரண்ட மக்கள் கூட்டம் போலிருந்தது. "நம் ராகவேந்திரர் வந்துவிட்டார். நம் சாமி வந்துவிட்டார். நம்மைக்காக்கும் தெய்வம் வந்துவிட்டது' என்று பல தரப்பினர் அவரவர் மனதிலிருப்பதை வெளிப்படுத்தி உற்சாகக் குரலெழுப்பினர். குடந்தையே சந்தோஷமயமானது.
தஞ்சாவூர். தமிழகத்து நெற்களஞ்சியம் என்ற சிறப்புப் பெற்ற மாநகரம். சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராய் சிறப்புப் பெற்றது. யானை கட்டி (நெற்)போர் அடித்த வளமான பூமி. அங்கு வடித்து வழியவிட்ட சோற்றுக்கஞ்சி தெருவில் கலந்து காய்ந்து விபூதி போன்ற புழுதி எழுப்பியதென்று சங்கப்பாடல் தஞ்சை வளத்தை தரணிக்கே எடுத்துச்சொன்ன கம்பீரம்.
அந்த கம்பீரம் அப்போது களையிழந்து விட்டது. தஞ்சை பூமி மழைகண்டு பல ஆண்டுகளாகிவிட்டன. படிப்படியாய் ஆறுகளும் குளங்களும் வற்றிப் போய் விட்டன. பூமி பிளந்து ஆங்காங்கே பெரிய வெடிப்போடு காணப்பட்டது. அதன் துவாரங்களில் விஷஜந்துகள் இறங்கி இருப்பிடமாக்கிக் கொண்டன. மக்கள் குடிக்கவும் நீரின்றி, வெகுதூரம் சென்று வெகுஆழத்தில் சொற்பமாய் சுரக்கும் நீரைக் காத்திருந்து, தேங்காய் சிரட்டையில் முகந்து மண்பானைகளில் சேகரித்து ஊற்றிக்கொணர்ந்தனர். சிலர் வெளியூர் சென்றும் மாட்டு வண்டிகளில் நீர் கொணர்ந்தனர்.
குடிக்கவே நீரில்லாதபோது பயிர்களுக்குச் சொல்லவேண்டியதேயில்லை. விளைச்சல் சுத்தமாக இல்லை. திண்ணையில் சாற்றி வைக்கப்பட்டிருந்த ஏர்க் கலப்பையில் நூலாம்படை சூழ்ந்திருந்தது. உழவு மாடுகள் தீனியின்றியும், வயிறார கிடைத்த பொட்டு கலந்த நீர் குடித்து ஆண்டுகளாகிய தால் நடக்கக்கூட திராணியின்றிப் படுத்திருந்தன. பஞ்சம் பட்டினி என்று தஞ்சை தவித்துப்போய் இருந்தது.
தஞ்சை அரண்மனையில் மன்னர் சோகமாய் அமர்ந்திருந்தார். தினம் தினம் அவர் செவிக்கு வருகின்ற சேதிகள் மன்னரை நிலைகுலையச் செய்தன. கொத்துக்கொத்தாக கால்நடைகள் மடிவதும், மக்கள் இறப்பதும் தினசரி செய்தியாகியது. அரண்மனை பீப்பாய்களில் சேகரித்து வைக்கப்பட்ட தண்ணீரும் குறைய ஆரம்பித்தது. மக்களின் பட்டினிச் சாவு மன்னரை மிகவும் பாதித்தது. தனது அமைச்சரை அழைத்து அரண்மனைக் களஞ்சியத்தில் இருக்கின்ற தானியங்களையும், பெரும்கிடங்குகளில் சேமித்துவைத்துள்ள தானியங்களையும் மக்களுக்கு நாளையிலிருந்து விநியோகித்தால் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தாங்கும் என மன்னர் விசாரித்தார்.
""மன்னா. இதுபோன்றோர் நிலை வந்தால் நீங்கள் இப்படித்தான் முடிவெடுப்பீர்கள் என நான் முன்பே கணக்கெடுத்துவிட்டேன். அதன்படி பார்த்தால் நமது அரண்மனையிலிருந்து நாம் விநியோகிக்கும் தானியங்கள் ஏறக் குறைய இரு மாதங்களே தாங்கும் மன்னவா.''
""நல்லது அமைச்சரே. இதற்கு வேறேதும் மாற்று ஏற்பாடு உண்டா?''
""உண்டு மன்னவா. புதிய கால்வாய்களை வெட்டி நீர் இருக்கும் பகுதியிலிருந்து...''
""சாத்தியப்படும் விஷயம் யோசியுங்கள். இந்தச் சூழ்நிலையில் பலவீனமான சக்தி யிழந்த மக்களை நாம் வேலைக்கு அமர்த்து வது நல்ல யோசனை அல்லவே.''
""ஆம் மன்னவா. இருப்பினும் இனிவரும் காலங்களுக்காகவேனும் இதுபோன்ற...''
""போதும். மக்கள் உயிர் காக்கப்பட வேண்டும். நாளையிலிருந்து நமது அரண் மனைக் களஞ்சியத்து தானியங்களை அவர்களுக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்யுங்கள். நமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து தானியங்கள் கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள். மேலும்...''
""மன்னர் மன்னவா... மகாராணியார் வருகிறார்கள்'' என்றார் அமைச்சர்.
""ப்ரபோ... ஒரு நல்ல செய்தி கேள்விப்பட்டு வந்தேன்'' என்றார் ராணியார்.
""மக்களுக்கு பிரயோஜனமானதா தேவி?''
""ஆம் பிரபோ. வெகுதூரம் சஞ்சாரம் சென்று பலகாலம் கழித்து ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் குடந்தை திரும்பியுள்ளதாக தகவல் வந்தது.''
""நல்ல செய்திதான். அதற்கும்...''
""ஸ்வாமி. எங்கெங்கோ சென்று எவ்வளவோ அற்புதங்களையும் அதிசயங் களையும் செய்த ராகவேந்திர ஸ்வாமிகள் இதற்கு நிச்சயம் ஒரு நல்ல தீர்வைக் கொடுப்பார் என்பது எனது அசாத்திய நம்பிக்கை.''
""சஞ்சாரம் சென்று திரும்பியவருக்கு நாம் உடனடியாக சிரமத்தைக் கொடுப்பது நல்லதா தேவி. ஓய்வு தேவையல்லவா அவருக்கு?''
""ஸ்வாமிகள்- மக்கள் நலத்தையே முக்கியமாகக் கொண்டவர். நாம் தகவல் சொல்லி அழைக்க அவர் மறுப்பேதும் கூறமாட்டார். நன்கு யோசியுங்கள். களஞ்சிய தானியமும் தீர்ந்துவிட்டால் நமது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?''
""....''
""இதற்கான தீர்வை அவர் ஒருவர் மட்டுமே கொடுக்க இயலும்.''
""மிகச்சரியான நேரத்தில் சரியான யோசனையைக் கொடுத்திருக்கிறாய் தேவி. அமைச்சரே, நீரே நேரடியாகச் சென்று, எனது மரியாதைக்குரிய அழைப்பை ஸ்வாமிகளுக்குத் தெரியப்படுத்தி அரண் மனைக்கு அழைத்து வரவும். தாங்கள் இன்றே இப்போதே கிளம்புங்கள்'' என்றார் மன்னர் சற்றே தெளிந்த மனதுடன்.
""உத்தரவு மன்னவா. நான் சென்று வருகிறேன்'' என அமைச்சர் விடை பெற்றார்.
ஸ்ரீராகவேந்திரர் குடந்தை மடத்திற்குள் சென்றவுடன் தனது குரு சுதீந்திரர் அமரும் இருக்கையினைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு நமஸ்கரித்தார்.
"என்னை பீடமேற்கச் செய்து, பரந்த இந்த சமுதாயத்திற்கு ஒரு மாத்வ சந்யாசியாக எனது கடமையைச் செய்ய என்னைத் தேர்ந் தெடுத்த என் குருவே. என்றும், எப்பொழுதும் மக்கள் நலமாயிருக்க நான் தங்களது ஆசிர் வாதத்தால் செய்கின்ற ஒவ்வொரு நிகழ்விற் கும் துணையிருந்து வாழ்த்த வேண்டும்' என மானசீகமாய் அவரிடம் ஆசிபெற்றார்.
(தொடரும்)